
பெர்மாத்தாங் பாவ், ஜூலை-26-நாட்டின் மனிதவள திறனை மேம்படுத்தும் நோக்கில், மனிதவள மேம்பாட்டுக் கழகம் (HRD Corp) ஏற்பாடு செய்துள்ள தேசிய பயிற்சி வாரம் (NTW) 2026 கோலாகலமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
பினாங்கு பெர்மாத்தாங் பாவ்வில் நிகழ்ச்சியில் உரையாற்றிய மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், இளைஞர்கள், தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் மற்றும் ஓய்வுபெற்றோர் உட்பட அனைத்து தரப்பினரும் தங்களின் திறன்களை வளர்த்துக்கொள்ளவும், சிறந்த பொருளாதார வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளவும் இந்தத் திட்டம் பெரிதும் உதவும் என்றார்.
_”படியுங்கள், அனுபவியுங்கள், கைவசப்படுத்துங்கள்”_ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட இந்த இரு நாள் நிகழ்வு, வயது அல்லது இட வரம்புமின்றி அனைவருக்கும் இலவசத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இம்மாபெரும் நிகழ்வை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, மலேசியாவின் தனிநபர் மொத்த தேசிய வருமானம் (GNI) 2025-ல் 12,380 அமெரிக்க டாலரை எட்டியுள்ளதாகவும், 2027-க்குள் 14,376 அமெரிக்க டாலரை எட்டுவதே இலக்கு என்றும் ரமணன் சொன்னார்.
மேலும், நாடு முழுவதும் 8,600-க்கும் அதிகமான பயிற்சிகளில் சுமார் 675,000 பேர் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளது குறித்தும் ரமணன் மகிழ்ச்சித் தெரிவித்தார்.



