
புத்ராஜெயா, ஜூலை-27-தடுப்பு முகாம்களில் நெரிசல் பிரச்சினைகள் காணப்பட்டாலும, ஆவணங்கள் இல்லாத அந்நிய நாட்டவர்களுக்கு எதிரான குடிநுழைவு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்திருக்கிறார்.
இது தேசிய இறையாண்மை மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். அதோடு நாட்டில் உள்ள வெளிநாட்டினர் குடிநுழைவுச் சட்டத்தைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். எனவே தீவிர அமலாக்க நடவடிக்கைகள் தொடரப்பட வேண்டும்.
வெளிநாட்டினர் விசா காலம் முடிந்தும் தங்காமல் இருப்பதையும், வருகை அனுமதிச் சீட்டுகளைத் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதையும் உறுதி செய்வதே அந்நடவடிக்கைகளின் நோக்கமாகும் என உள்துறை அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் ஆற்றிய உரையில் அமைச்சர் எடுத்துரைத்தார்.
நாட்டில் 19 தடுப்பு முகாம்கள் இருக்கின்றன. ஆனால் அமலாக்க நடவடிக்கைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து அவை கொள்ளளவைத் தாண்டி நிரம்பி வழிகின்றன.
இது மனிதாபிமானக் கவலைகளை வெளிப்படுத்தும் அரசு சாரா அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.
இருப்பினும், சட்ட அமலாக்கம் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நலன் ஆகியவற்றுக்கு இடையே அரசாங்கம் ஒரு சமநிலையைப் பேண வேண்டி உள்ளது என சைஃபுடின் வலியுறுத்தினார்.
இவ்வேளையில், மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையே நடைபெற்ற முந்தைய இருதரப்புச் சந்திப்பின் போது, தமது நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கிய மலேசியாவுக்கு இந்தோனேசிய அதிபர் Prabowo Subianto நன்றி தெரிவித்திருந்தார்.
அதே சமயம் இந்தோனேசியர்கள் மலேசியாவின் உள்நாட்டுச் சட்டங்களை மீறினால், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்திருந்ததையும் சைஃபுடின் சுட்டிக் காட்டினார்.



