
குவாலா திரெங்கானு, ஜூலை-27 – வெளிநாட்டு பெண்களை வைத்து உடல் மசாஜ் சேவை வழங்கி வந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு சுகாதார மையத்தில் குடிநுழைவுத் துறையினர் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.
நேற்றிரவு நடத்தப்பட்ட சோதனையின்போது, 10-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மசாஜுக்காக காத்திருந்துள்ளனர். அதற்கு முன்பு அதிகாரிகள் மறைமுகமாக விசாரணை நடத்தி, அங்கு வெளிநாட்டு பெண் மசாஜ் பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
திரெங்கானு மாநில குடிநுழைவுத் துறை இயக்குநர் முகமட் யூஸ்ரி முகமட் நோர் (Mohd Yusri Mohd Nor) கூறுகையில், நான்கு சீனப் பெண்களும், இரண்டு தாய்லாந்து பெண்களும் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
அவர்கள் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இல்லாதது மற்றும் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறியதாக விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், அந்த மையத்தின் உள்ளூர் உரிமையாளருக்கு வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்தியதாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
அதே நடவடிக்கையின் போது, இரண்டு உணவகங்கள் மற்றும் ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் ஆறு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மொத்தமாக 76 வெளிநாட்டவர்கள் பரிசோதிக்கப்பட்டதில், 12 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்தியதாக நான்கு உள்ளூர்வாசிகளுக்கு விளக்கம் கோரும் நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது.



