
கோலாலம்பூர், ஜூலை-28-நாட்டின் பொதுச் சுகாதாரத் துறை கடுமையான ஆள் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருவதாக செனட்டர் Dr லிங்கேஸ்வரன் ஆர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாத நிலவரப்படி, சுகாதாரத் துறையில் 18,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
இதில் 15,500-க்கும் அதிகமான தாதியர் பணியிடங்களும், சுமார் 2,900 உதவி மருத்துவ அதிகாரி இடங்களும் காலியாக உள்ளன.
இவற்றைக் களைய சுகாதார அமைச்சு ஆக்ககரமான பல்வேறு குறுகிய கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியதே.
ஆனால், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஆள் சேர்ப்பு நடவடிக்கைகள் மிகவும் மெதுவாக இருப்பதாகக் கூறிய அவர், இது மொத்த காலியிடங்களில் வெறும் 3 விழுக்காட்டை மட்டுமே பூர்த்திச் செய்வதாகத் தெரிவித்தார்.
எனவே பொதுச் சுகாதார அமைப்பு பாதிக்கப்படுவதைத் தடுக்க ‘அவசரக்கால பணியாளர் வழிமுறையை’ உடனடியாக அமுல்படுத்துமாறு அவர் சுகாதார அமைச்சைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரமாக்குதல், நியாயமான ஊக்கத்தொகை வழங்குதல் மற்றும் தாதியர் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் போன்ற தீர்வுகளையும் அவர் முன்வைத்துள்ளார்.
வரும் 2030-க்குள் சுகாதாரத் துறையின் நிலைத்தன்மையை உறுதிச் செய்ய உடனடி நடவடிக்கை அவசியம் என அவர் வலியுறுத்தினார்.



