
பெர்மாத்தாங் பாவ், ஜூலை-28-NTW 2026 எனும் ‘2026 தேசியப் பயிற்சி வாரம்’ அனைத்து மலேசியர்களுக்கும் குறிப்பாக இளைஞர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளவும் வாய்ப்புகளை வழங்கும் ஒரு முக்கியத் தளமாக இருப்பதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்திருக்கிறார்.
NTW வெறும் பயிற்சித் திட்டம் மட்டுமல்ல, மாறாக மாறிவரும் பணிச் சூழலுக்கு ஏற்ப அனைத்துத் தரப்பு மக்களும் தொடர்ந்து வளர்ச்சியடைவதற்கான ஒரு வாய்ப்பாகும் என அவர் குறிப்பிட்டார்.
இளைஞர்கள், தொழிலாளர்கள், இல்லத்தரசிகள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க விரும்பும் எவருக்கும் NTW சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
பினாங்கு, பெர்மாத்தாங் பாவ்வில் உள்ள UiTM பினாங்கு கிளையில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற NTW 2026-ன் நிறைவு விழாவில் உரையாற்றும் போது ரமணன் அவ்வாறு கூறினார்.
நான்காவது ஆண்டாக நடைபெறும் NTW 2026, கற்றலை மலேசியர்களின் வாழ்க்கை முறையாக மாற்றுவதில் HRD Corp மற்றும் KESUMA ஆகியவற்றின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
‘கற்றல். வளர்ச்சி. உயர்வு.’ (Learn. Grow. Elevate.) என்ற கருப்பொருளுடன் ஜூலை 20 முதல் 26 வரை 2026 NTW நடைபெற்றது. வயது, பின்னணி, இருப்பிடம் ஆகியவற்றைக் கடந்து சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் ஆயிரக்கணக்கான பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இவ்வாண்டு ஜூலை 24 நிலவரப்படி, அதில் 1,619 பயிற்சி வழங்குநர்கள் 8,682 பாடநெறிகளை வழங்கினர். நாடு முழுவதும் 674,818 பங்கேற்புகள் பதிவு செய்யப்பட்டன. பங்கேற்றவர்களில் மிக இளையவர் 3 வயதுடையவராகவும், மூத்தவர் 89 வயதுடையவராகவும் இருந்தனர். இதன் மூலம், வாழ்நாள் கற்றல் என்பது அனைத்து மலேசியர்களுக்கும் உண்மையிலேயே சாத்தியமானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மனிதவள மேம்பாட்டுத் திட்டத்தை ஆதரிக்கும் வகையில் பல்வேறு அமைச்சுகள், அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் துறைப் பங்காளிகள் ஒன்றிணைந்து அந்நிகழ்வில் பங்கேற்றன. கண்காட்சிகள், தொழில்நுட்பச் செயல் விளக்கங்கள், திறன் மேம்பாட்டுப் பயிலரங்குகள், கற்றல் செயல்பாடுகள் ஆகியவையும் இடம் பெற்றன.
இதனிடையே, தரமான கற்றலுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதிலும், மலேசியர்களிடையே வாழ்நாள் முழுவதும் கற்கும் கலாச்சாரத்தை வளர்ப்பதிலும் மேற்கொள்ளப்பட்ட கூட்டு முயற்சிகளின் வெற்றியை 2026 NTW வின் சாதனைகள் பிரதிபலிப்பதாக HRD Corp-இன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஷமீர் அஜீஸ் தெரிவித்தார்.
NTW-இன் போது மட்டுமல்லாமல் ஆண்டு முழுவதும் அனைத்து மலேசியர்களுக்கும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய, அனைத்துப் பங்குதாரர்களுடனான மூலோபாயக் கூட்டாண்மைகளை HRD Corp தொடர்ந்து வலுப்படுத்தும் என்றாரவர்.
அந்நிகழ்வில் பினாங்கு மாநில முதலமைச்சர் சாவ் கோன் யோவ், மனிதவள அமைச்சின் (KESUMA) பொதுச் செயலாளர் டத்தோ அஸ்மான் முகமது யூசோப், மனிதவள மேம்பாட்டுக் கழகத்தின் (HRD Corp) தலைவர் டத்தோ ருஸ்லி ஜாஃபர் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஷமீர் அஜீஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



