
தெமர்லோ, ஜூலை.31- கிழக்குக் கடற்கரை நெடுஞ்சாலையின் 112.3 ஆவது கிலோமீட்டரில் நேற்றிரவு நிகழ்ந்த இரு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் ஆடவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரவு சுமார் 11 மணியளவில் நிகழ்ந்த அவ்விபத்தில் பலியானவர் சிலாங்கூர், கிள்ளானைச் சேர்ந்த 19 வயது Muhammad Zulhairi Azhar Mohd Shahrizan என அடையாளம் காணப்பட்டுள்ளது.
RXZ Members 8.0 என்ற நிகழ்வில் கலந்து கொள்ள, ஐந்து பேர் கொண்ட குழுவுடன் இரவு சந்தை வியாபாரியான அவர் கிள்ளானில் இருந்து கோலா திரெங்கானுவிற்குச் சென்று கொண்டிருந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக Temerloh மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் Mohd Nasyim Bahron தெரிவித்தார்.
அவர் செலுத்திய Yamaha LC135 மோட்டார் சைக்கிள் இடதுபுறப் பாதையில் சறுக்கி விழுந்த நிலையில், அந்நபர் தூக்கி வீசப்பட்டு வலதுபுறப் பாதையில் விழுந்துள்ளார். அச்சமயம் வலதுபுறப் பாதையில் வந்து கொண்டிருந்த Perodua Myvi மோதியதில் அவர் மீண்டும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
மரணமடைந்த ஆடவரிடம் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உரிமம் இல்லை. கவனக்குறைவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என Mohd Nasyim கூறினார். அச்சம்பவம் 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.



