
மலேசிய அருங்காட்சியகத் துறைக்கும் ‘Thong Empire’ நிறுவனத்திற்கும் இடையிலான ‘WARISAN DALAM PERPADUAN PADA SETIAP SUAPAN’ என்ற தலைப்பில் உத்திசார் கூட்டு முயற்சியை, மலேசிய அருங்காட்சியகத் துறை வாயிலாக தேசிய ஒற்றுமை அமைச்சு இன்று தொடக்கி வைத்தது. மலேசிய அருங்காட்சியகத் துறையின் Gallery 1றில் நடைபெற்ற அவ்விழாவை, தேசிய ஒற்றுமை அமைச்சின் தலைமைச் செயலாளர் Datuk Haslina binti Abdul Hamid தொடக்கி வைத்தார்.
ஒற்றுமை எனும் கருப்பொருளை மையமாகக் கொண்ட அக்கூட்டு முயற்சியில், தேசிய ஜவுளி அருங்காட்சியகம், தேசிய அருங்காட்சியகம், ‘Thong Bowl’ மற்றும் ‘Thong Cha Plus’ ஆகியவை கைகோர்த்துள்ளன. அம்முயற்சி, அருங்காட்சியகங்களின் சேகரிப்புகளுக்குப் புதியதொரு பரிமாணத்தை அளிக்கும் வகையில், சேகரிப்புக்குரிய பின்கள் (collectible pins) மற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிறப்புத் தங்க நாணயங்கள் போன்ற பாரம்பரியம் சார்ந்த பொருட்களை முன்னிலைப்படுத்துகிறது.
2026 தேசிய தினம் மற்றும் மலேசிய தினத்தையொட்டி வரலாற்று மற்றும் கலாச்சாரக் கதைகளைச் சொல்லும் அருங்காட்சியகக் கலைப் பொருட்களின் உந்துதலுடன் இவை உருவாக்கப்பட்டுள்ளன.
மூங்கில் குருத்து, ஃபீனிக்ஸ் பறவை, மயில், குதிரை, பாம்பு வடிவம், செம்பருத்தி என ஆறு பாரம்பரிய ஜவுளி வடிவங்கள் இடம் பெற்றுள்ளன. அதே வேளை, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிறப்புத் தங்க நாணயம் மலேசியாவின் வரலாற்றைக் கொண்டாடும் வகையில் அமைந்துள்ளன.
கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பல இன பன்முகத்தன்மை கொண்ட தேசத்தின் அடையாளமாக, சுதந்திரத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்-ஹாஜ் அவர்களின் உருவமும் அதில் இடம் பெற்றுள்ளது.
இந்தக் கூட்டு முயற்சி, பொதுச் சேவைகளை வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் ‘முழு-அரசாங்க’ மற்றும் ‘முழு-சமூக’ அணுகுமுறைகளைக் காட்டுவதாக Datuk Haslina Abdul Hamid தமதுரையில் குறிப்பிட்டார். இந்தக் கூட்டு முயற்சி, இரு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 27 வரை நடைபெறும்.



