
புத்ராஜெயா, ஆகஸ்ட்.11- மடானி அரசாங்கம் இந்தியச் சமூகத்திற்கான சமூக-பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, MITRA எனப்படும் மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவு மூலம் ‘மடானி Tuisyen திட்டம்’, ‘உயர்வு மடானி’ மற்றும் ‘தர்மா மடானி’ ஆகிய மூன்று முக்கிய முன்னெடுப்புகளைச் செயல்படுத்த மொத்தம் 6.7 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்திட்டங்கள் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் என அத்திட்டங்களுக்கான மானியம் வழங்கும் விழாவை, பிரிக்பீல்ட்ஸில் கலா மண்டபத்தில் தொடக்கி வைத்த பின் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அவ்வாறு கூறினார்.
2026-ஆம் ஆண்டிற்கான மடானி டியூஷன் திட்டத்திற்காக 28 பயிற்சி மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதில் மொத்தம் 2.63 மில்லியன் ரிங்கிட் நிதியுதவியுடன் 2,343 SPM மற்றும் STPM மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
B40 மற்றும் M40 பிரிவினரைச் சேர்ந்தவர்களுக்கான உயர்வு மடானி திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், ‘Micro’, ‘Growth’ மற்றும் ‘High’ ஆகிய பிரிவுகளில் மொத்தம் 3.05 மில்லியனுக்கும் ரிங்கிட்டுக்கு அதிகமான மானியத்தைப் பெற 128 தொழில்முனைவோர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில், தர்மா மடானி திட்டத்தின் 4ஆம் கட்டத்தின் கீழ் 52 இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு மொத்தம் 1.04 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான மானியங்கள் வழங்கப்பட்டன.
நாடு முழுவதும் உள்ள 676 இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு இதுவரை மொத்தம் 13.52 மில்லியன் ரிங்கிட் நிதியை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது என மித்ரா தலைமை இயக்குனர் கே. ரவீந்திரன் நாயர் தெரிவித்தார்.
இதனிடையே இந்நிகழ்வில் மான்யம் பெற்றுக் கொண்டவர்களில் சிலர் தங்களது மகிழ்ச்சியை வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்துக் கொண்டனர்.
MADANI Tuition, Uyarvu MADANI மற்றும் Dharma MADANI திட்டங்கள், கல்வி மேம்பாடு, பொருளாதார வலுவூட்டல் மற்றும் சமூக நிறுவனங்களை நிலையான முறையில் வலுப்படுத்துதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய, போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் வளமான சமூகத்தை உருவாக்கும் ‘மலேசியா MADANI’ தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இருக்கிறது.



