
கோலாலம்பூர், ஆகஸ்ட்.12-அண்மையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 10 ஆண்டுகளுக்கும் மேல் செல்லுபடியாகும் மலேசிய அனைத்துலகக் கடப்பிதழ்களை வெளியிடுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள சில விமான நிறுவனங்களில் மலேசியப் பயணிகள் சிக்கல்களை எதிர்நோக்குவதை அடுத்து அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பயணத்திற்கான கடப்பிதழ்கள் குறைந்தபட்சம் ஆறு மாத காலமாவது செல்லுபடியாகும் தன்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை தொடர்பில் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுக்கு ஏற்பட்ட குழப்பமே அச்சிக்கல்களுக்கு முக்கியக் காரணம் என குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் Zakaria Shaaban தெரிவித்தார்.
10 ஆண்டுகளுக்கு மேல் செல்லுபடியாகும் கடப்பிதழ்களை வைத்திருக்க எந்தத் தடையும் இல்லை என்பதை அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பான ICAOவுடன் மேற்கொள்ளப்பட்ட சரிபார்ப்புகள் உறுதிப்படுத்தியதாக அவர் கூறினார்.
ICAO மற்றும் விமான நிறுவனங்களுடன் அவ்விவகாரத்திற்குத் தீர்வு காணும் வரை தற்காலிக நடவடிக்கையாக, அதிகபட்சம் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் கடப்பிதழ்களை மட்டுமே வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது 10 ஆண்டுகளுக்கும் மேல் செல்லுபடியாகும் கடப்பிதழ்களை வைத்திருப்பவர்களுக்கு, கட்டணமின்றி மாற்று கடப்பிதழ்கள் வழங்கப்படும். அவை அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை மட்டுமே செல்லுபடியாகும் என Zakaria Shaaban குறிப்பிட்டார்.
10 ஆண்டுகளுக்கும் மேல் செல்லுபடியாகும் கடப்பிதழ் வைத்திருப்பவர்களுக்கு, அவற்றைப் புதியதாக மாற்றுவதில் முன்னுரிமை அளிக்கப்படும். அவற்றைக் கொண்டுள்ள மலேசியர்களின் பயணத்தை எளிதாக்க, இது குறித்த தகவல் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்படும் என்றாரவர்.
சில மலேசியப் பயணிகள் Zimbabweயில் இருந்து திரும்பும் போது சிரமங்களை எதிர்கொண்டதாக சமூக ஊடகப் பயனர் ஒருவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
கடப்பிதழ் காலாவதியாக ஆறு மாதங்களுக்கு முன்பே அதைப் புதுப்பித்திருந்ததால், அவர்களின் கடப்பிதழ்கள் 10 ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் செல்லுபடியாகும் வகையில் இருந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.



