
ஷா ஆலாம், ஆகஸ்ட் 14 – சிலாங்கூரின் உள்ளூர் தொழில்முனைவோரை டிஜிட்டல் வர்த்தகத்துடன் இணைக்கும் PLATS எனும் பிளாட்ஃபார்ம் சிலாங்கூர், இன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட தொழில்முனைவோரைக் கொண்ட தளமாக வளர்ந்துள்ளது.
அந்தப் பயணத்தில் சிறந்து விளங்கிய தொழில்முனைவோரைக் கௌரவிக்கும் வகையில், Sunway Resort ஹோட்டலில் 2026 பிளாட்ஃபார்ம் சிலாங்கூர் விருதுகள் (MAPS 2026) நடைபெற்றன.
Yayasan MBI ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவை சிலாங்கூர் முதலமைச்சர் Datuk Seri Amirudin Shari தொடக்கி வைத்தார். அரசுத் தலைவர்கள், மாநில நிறுவனங்கள், தொழில்துறை பங்காளர்கள் மற்றும் தொழில்முனைவோர் என 1,000-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் தொழில்முனைவோரின் பங்களிப்பைப் பாராட்டிய Amirudin, மாறிவரும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஏற்ப அவர்கள் தொடர்ந்து வளர்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது மாநில அரசின் முன்னுரிமையாக இருக்கும் என்றார்.
அதன் ஒரு பகுதியாக, இவ்வாண்டு U-PLATS உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் வாயிலாக 2,852 தொழில்முனைவோருக்கு வணிக வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
MAPS வெற்றியாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு மட்டுமல்ல; விடாமுயற்சி, மனஉறுதி மற்றும் புதுமையுடன் முன்னேறும் தொழில்முனைவோரைக் கொண்டாடும் தளம் என MBI சிலாங்கூர் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Datuk Ts. Saipolyazan M Yusop தெரிவித்தார்.
விழாவின் உயரிய அங்கீகாரமான ‘சிலாங்கூர் மாநில நுண்-தொழில்முனைவோர் கிராண்ட் விருது’ ‘Minah Satay’ நிறுவனர் Norminah Syafrial-க்கு வழங்கப்பட்டது. இளம், பெண், சமூக, புதுமை மற்றும் டிஜிட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் சிறந்த தொழில்முனைவோர் கௌரவிக்கப்பட்டனர்.



