Latestமலேசியா

பெர்லிஸ் வீரமாகாளியம்மன் ஆலயம் இடிப்பு; RSN ராயர் கடும் கண்டனம்

கோலாலாம்பூர், ஆகஸ்ட்-20-பெர்லிஸ், கங்கார், புக்கிட் லாகியில் பல ஆண்டுகளாக வழிபாட்டில் இருந்துவந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயம் மாநில அரசால் இடிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நில ஆக்கிரமிப்பு எனக் கூறி முன்னறிவிப்பின்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினரும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவருமான RSN ராயர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திரத்தை பெரிக்காத்தான் நேஷனல் தலைமையிலான பெர்லிஸ் அரசு மதிக்கத் தவறிவிட்டதாக அவர் சாடினார்.

ஆலய விவகாரத்தில் ஏதேனும் சட்டரீதியான குறைபாடுகள் இருந்தால் கூட, அரசுத் தரப்பு ஆலய நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு கண்டிருக்க வேண்டுமே தவிர, இடித்திருக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டினார்.

இச்செயல் நாட்டின் பல்லின ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக அமைவதோடு, இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது.

இது தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்திய ராயர், சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதிச் செய்ய அரசு விவேகமாகச் செயல்பட வேண்டும் என்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!