
குவாந்தான், ஆகஸ்ட்-22-பஹாங், குவாந்தானில் உள்ள நகைக்கடை ஒன்றில், பட்டப்பகலில் புகுந்த முகமூடிக் கொள்ளையர்கள் சுமார் 500,000 ரிங்கிட் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
தாமான் பண்டான் டாமாயில் உள்ள நகைக்கடை ஒன்றில் பிற்பகல் 2 மணியளவில் இந்த துணிகரக் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முகக் கவசம் மற்றும் கறுப்பு நிற _raincoat_ அணிந்து வந்த 4 நபர்கள், கத்தி, பாராங் மற்றும் பம்ப் துப்பாக்கியுடன் கடைக்குள் நுழைந்து நகைகளைச் சூறையாடினர்.
வெள்ளிக்கிழமை தொழுகை நேரமானதால் அப்பகுதி ஆள்நடமாட்டமின்றி அமைதியாக இருந்ததை சாதகமாகப் பயன்படுத்தி இந்தக் கொள்ளை அரங்கேறியுள்ளது.
பின்னர் அவர்கள் பதிவு எண் பலகை இல்லாத இரு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றனர்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் ஆரம்பகட்ட மதிப்பு சுமார் 500,000 ரிங்கிட் என கணக்கிடப்பட்டுள்ளதாகவும், தப்பியோடிய கொள்ளையர்களைப் பிடிக்க தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் Ashari Abu Samah தெரிவித்துள்ளார்.



