Latestமலேசியா

சிரம்பானில் பாலியல் நடவடிக்கைகள் நடத்தப்பட்ட மலிவு விலை விடுதிகளில் சோதனை: 57 பேர் கைது

சிரம்பான், ஆகஸ்ட்-25-நெகிரி செம்பிலான், சிரம்பானில் பாலியல் நடவடிக்கைக்காகப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் மூன்று இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 57 பேர் கைது செய்யப்பட்டனர். கோலாலம்பூரில் உள்ள இந்தோனேசியத் தூதரகத்தின் ஒத்துழைப்புடன், புத்ராஜெயா குடிநுழைவு தலைமையகத்தின் புலனாய்வு மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் பிரிவு அச்சோதனைகளை மேற்கொண்டது. கோலாலம்பூரில் உள்ள இந்தோனேசியத் தூதரகம் மற்றும் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் அச்சோதனைகள் நடத்தப்பட்டதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் ஏழுவர் உள்நாட்டு ஆண்கள். மூவர் இந்தோனேசிய ஆடவர்கள். 12 பேர் வங்காளதேச ஆண்கள். மூவர் மியன்மார் ஆடவர்கள். 26 பேர் இந்தோனேசியப் பெண்கள். ஐவர் வங்காளதேசப் பெண்கள். ஒருவர் இந்தியப் பெண். அவர்கள் அனைவரும் 19 முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்கள்.

சோதனைகளின் போது, வங்காளதேசம், இந்தியா மற்றும் இந்தோனேசியப் கடப்பிதழ்கள், கைபேசிகள், சாவிகள், ஆணுறைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. சோதனை நடத்தப்பட்ட இடங்களை மலேசியர்களும் வெளிநாட்டினரும் நிர்வகித்து கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக நம்பப்படுகிறது. கைதான பெண்கள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு ஒரு முறைக்கு 50 ரிங்கிட் விலையில் பாலியல் சேவைகளை வழங்கி வந்ததாக Zakaria Shaaban கூறினார். அச்சட்டவிரோத நடவடிக்கைகள் ஓராண்டாக நடைபெற்று வந்ததாகவும், அதன் மூலம் ஏறக்குறைய 540,000 ரிங்கிட் வருமானம் ஈட்டப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட அனைவரும் பல்வேறு குடிநுழைவுச் சட்டங்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்காகக் குடிநுழைவுத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!