
கோலாலம்பூர், ஆகஸ்ட்-27,கடைசி நேரத்தில் சிறப்புப் பொது விடுமுறைகளை அறிவிப்பது, வணிக நடவடிக்கைகளுக்குக் கூடுதல் நிதிச் சுமையையும் பாதிப்பையும் ஏற்படுத்தும் என மலேசிய முதலாளிகள் சம்மேளனம் MEF எச்சரித்துள்ளது.
2026 சுக்மா போட்டியில் சிலாங்கூர் மாநிலம் 101 தங்கப் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியனாக வாகை சூடியதைத் தொடர்ந்து, செப்டம்பர் 1-ஆம் தேதியை சிறப்பு விடுமுறையாக மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், இது போன்ற திடீர் விடுமுறை அறிவிப்புகள் நிறுவனங்களின் பணியாளர் திட்டமிடல், உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலி நடவடிக்கைகளைப் பாதிக்கும் என MEF தலைவர் டத்தோ Dr Syed Hussain Syed Husman தெரிவித்துள்ளார்.
குறிப்பாக உற்பத்தி, தளவாடம், சுகாதாரம் மற்றும் விருந்தோம்பல் போன்ற துறைகள் OT எனப்படும் மிகை நேர ஊதியச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், இந்தத் திடீர் விடுமுறைகள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SME) செயல்பாடுகள், விற்பனை மற்றும் பணப்புழக்கத்தை நேரடியாகப் பாதிக்கும் என மலேசிய வர்த்தகச் சங்கங்களின் கூட்டமைப்பான FMBA கவலைத் தெரிவித்துள்ளது.
எனவே, எதிர்காலத்தில் இது போன்ற சிறப்பு விடுமுறைகளை அறிவிக்கும் போது, வர்த்தக நிறுவனங்கள் தங்களை முன்கூட்டியே தயார்படுத்திக் கொள்ள ஏதுவாகப் போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என இவ்விரு அமைப்புகளும் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளன.



