Latestமலேசியா

சன்வே லகூன் ரோலர் கோஸ்டர் விபத்து: ஆரம்பக் கட்டக் காரணத்தை வெளியிட்ட சிலாங்கூர் வேலையிட பாதுகாப்பு, சுகாதாரத்துறை

ஷா ஆலாம், ஆகஸ்ட்-27- சுபாங் ஜெயாவில் உள்ள சன்வே லகூன் (Sunway Lagoon) பொழுதுபோக்கு பூங்காவில் நிகழ்ந்த ரோலர் கோஸ்டர் விபத்திற்கான ஆரம்பக் கட்டக் காரணத்தை சிலாங்கூர் வேலையிட பாதுகாப்பு, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. ரோலர் கோஸ்டர் திடீரென நின்றதற்கு முன் அதன் சறுக்கு இயக்க அமைப்பில் ஏற்பட்ட கோளாறே காரணம் என்று நம்பப்படுவதாக அது கூறியது.

அந்த ரோலர் கோஸ்டர், புறப்பட்ட இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் சறுக்கு இயக்க அமைப்பில் கோளாறு ஏற்படும் வரை சீராக இயங்கிக் கொண்டிருந்தது சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனை அடுத்து அவசரநிலை தடுப்பு அமைப்பு தானாகவே செயல்படத் தொடங்கியதால், ரோலர் கோஸ்டர் திடீரென நின்றது. ரோலர் கோஸ்டரில் 22 பேர் இருந்த நிலையில், பாதிக்கப்பட்ட 10 பேர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அது விளக்கியது.

சம்பவத்திற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய, புத்ராஜெயாவின் தடயவியல் பொறியியல் பிரிவு களத்தில் இறங்கியுள்ளது. மேலதிக விசாரணைகள் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொள்ள ஏதுவாக, சம்பவ இடத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே வேளை, குறிப்பிட்ட தரப்பினரை நேரில் அழைத்து வாக்குமூலம் பெறுவது உள்ளிட்ட தொடர் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த சனிக்கிழமை இரவு சன்வே லகூனில் ரோலர் கோஸ்டர் சவாரியின் போது விபத்தொன்று நிகழ்ந்ததை, சன்வே குழுமத்தின் நிறுவனர் Tan Sri Jeffrey Cheah நேற்று உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!