Latestஉலகம்

வெள்ள மீட்புப் பணிகளுக்காக சனிக்கிழமை நேப்பாளம் செல்கிறது SMART குழு

கோலாலம்பூர், செப்.03-நேப்பாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுகரமான வெள்ளத்தைத் தொடர்ந்து, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் உதவுவதற்காக வரும் சனிக்கிழமை மலேசியாவின் சிறப்புப் பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவான SMART அந்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவிருக்கிறது.

அக்குழு சுபாங் விமானப்படைத் தளத்திலிருந்து சனிக்கிழமை காலை புறப்படும் என தேசிய பேரிடர் நிர்வாக மன்றமான NADMA தெரிவித்துள்ளது.

மலேசியாவின் வெளியுறவு அமைச்சுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பலனாக, SMART குழு நேப்பாளத்துக்குள் நுழைய அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ளவர்களைத் தேடி மீட்பதே அக்குழுவின் தலையாய நோக்கமாகும்.

இவ்வேளையில், கடந்த வாரம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து திபெத் மற்றும் நேப்பாளத்தில் பாதுகாப்பாக மீட்கப்பட்ட 77 மலேசியர்கள், நேப்பாளத் தலைநகர் காத்மாண்டுவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மலேசியாவுக்குத் திருப்பியனுப்பப்படவுள்ளனர்.

எனினும், மேலும் 55 மலேசியர்களின் நிலைமை இதுவரை தெரியவில்லை என அரசாங்கப் பேச்சாளர் Datuk Seri Fahmi Fadzil தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காகவும் பேரிடருக்குப் பிந்தைய மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மலேசியா நேப்பாளத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 4 மில்லியன் ரிங்கிட்) நிதியுதவி வழங்கவுள்ளது. அந்த உதவி நேப்பாளத்தின் மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நேப்பாளத்தின் ராசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்திய எதிர்பாராத திடீர் வெள்ளம் ஏற்பட்டது. பனிப்பாறை சரிவு காரணமாக வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!