Latestமலேசியா

வணக்கம் மலேசியா பெயரில் AI மூலம் போலிச் செய்திகள்; மோசடி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்!

கோலாலம்பூர், செப்டம்பர் 24 –வணக்கம் மலேசியாவின் பெயரையும் செய்தி வடிவத்தையும் தவறாகப் பயன்படுத்தி, AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் போலியான விளம்பரங்கள் மற்றும் காணொளிகளை உருவாக்கி, பொதுமக்களை ஏமாற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, Seiko கைக்கடிகாரங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும், அவற்றை வாங்குவதற்குப் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும் போலியான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்தக் கைக்கடிகாரங்களை ஏற்கெனவே வாங்கிவிட்டதாகப் பலர் கருத்துகளைப் பதிவிட்டிருப்பது போன்றும் மோசடிக்காரர்கள் போலியான பதிவுகளை உருவாக்கியுள்ளனர்.
முன்னதாக, வணக்கம் மலேசியாவின் பெயரில் விளம்பரப் போஸ்டர்களாகப் பரப்பப்பட்ட இந்த மோசடிச் செய்திகள், தற்போது AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, எங்களது செய்தி வாசிப்பாளர்களின் குரலைப் போன்ற குரலுடன் காணொளிச் செய்திகளாகவும் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்த விளம்பரங்களுக்கும் காணொளிகளுக்கும் வணக்கம் மலேசியாவுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறோம்.
இத்தகைய மோசடிகள் குறித்து வணக்கம் மலேசியா ஏற்கெனவே பலமுறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC-யிடமும் புகார் அளித்துள்ளது.

இருப்பினும், மோசடிக்காரர்கள் தற்போது மேலும் நுட்பமான முறையில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உண்மையான செய்திகளைப் போன்றே போலிக் காணொளிகளை உருவாக்கி வருகின்றனர்.

எனவே, வணக்கம் மலேசியாவின் பெயரில் வெளியாகும் இதுபோன்ற விற்பனை விளம்பரங்களை நம்பி, பொதுமக்கள் எந்தவொரு பொருளையும் ஆர்டர் செய்யவோ, பணம் செலுத்தவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

சந்தேகத்திற்குரிய விளம்பரங்கள் அல்லது காணொளிகளைக் கண்டால், வணக்கம் மலேசியாவின் அதிகாரப்பூர்வத் தளங்கள் வாயிலாகவோ, எங்களை நேரடியாகத் தொடர்புகொண்டோ அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
வணக்கம் மலேசியாவின் பெயரில் பரப்பப்படும் போலிச் செய்திகளை நம்பி ஏமாறாதீர்கள்! உங்கள் பணத்தையும் தனிப்பட்ட தகவல்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!