Latestஉலகம்

நேப்பாளத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீண்டும் குடியேறத் தடை; 33,000 பேர் பாதிக்கப்பட வாய்ப்பு

கட்மாண்டு, செப்-24-நேப்பாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அபாய மண்டலங்களாக அறிவித்து, அங்கு வசித்த சுமார் 33,000 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்கள் பழைய வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆற்றின் இயல்பான நீர்மட்டத்தைவிட 13 மீட்டர் வரை உயர்ந்த பகுதிகள் உள்ளிட்ட வெள்ளப் பாதிப்புக்கான அறிகுறிகள் காணப்படும் இடங்கள் அபாய மண்டலங்களாக வகைப்படுத்தப்படும். எதிர்காலத்தில் மீண்டும் பேரிடர் ஏற்படும் அபாயம் இருப்பதால், மக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் சொந்தப் பகுதிகளுடன் கொண்டுள்ள உணர்வுபூர்வமான தொடர்பு, அவர்களை இடமாற்றம் செய்வதில் சவாலாக இருக்கிறது. இருப்பினும், பாதுகாப்பான குடியிருப்புகளுக்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

அதோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டு வசதிக்காக சுமார் 2,600 அமெரிக்க டாலர் மானியமும், நான்கு உறுப்பினர்கள் வரை உள்ள குடும்பங்களுக்கு மாதம் 98 அமெரிக்க டாலர் வாழ்க்கைச் செலவு மற்றும் வாடகை உதவியும் வழங்கப்படவுள்ளது. மீட்புப் பணிகளுக்கான செலவு ஆரம்ப மதிப்பீட்டான 4.77 பில்லியன் அமெரிக்க டாலரை விட அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேப்பாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் 1,451 பேர் உயிரிழந்தனர். 600-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் உட்பட சுமார் 5,700 பேர் காணாமல் போயிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!