
பேங்கோக், செப்டம்பர்-27,தாய்லாந்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு தீவிரமடைந்து வருவதையடுத்து, தலைநகர் பேங்கோக் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இருக்கும் மலேசியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பேங்கோக்கில் கடந்த 48 மணி நேரத்தில் பெய்த சுமார் 300 மில்லி மீட்டர் கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அம்மாநகரை பேரிடர் பாதித்த பகுதியாக பேங்காக் ஆளுநர் சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
முக்கியச் சாலைகள் நீரில் மூழ்கி வாகனங்கள் பாதி அளவுக்குத் தத்தளித்தோடு, மக்களும் இடுப்பளவு வெள்ள நீரில் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த வார இறுதி முழுவதும் மேலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என தாய்லாந்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதே சமயம், வடக்கு மற்றும் மத்திய தாய்லாந்தில் பெய்து வரும் கனமழை மற்றும் அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்படுவதால், Chao Phraya நதியில் நீர்மட்டம் அபாயகரமான அளவுக்கு உயர்ந்து வருவதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரித்துள்ளது.
இதையடுத்து, அங்குள்ள மலேசியத் தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கையில், உள்ளூர் வானிலை தகவல்களைத் தொடர்ந்து கண்காணிக்குமாறும், Chao Phraya நதி மற்றும் வெள்ள அபாயம் உள்ள தாழ்வான பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அவசர காலங்களில் தூதரக உதவிகளை உடனடியாகப் பெற ஏதுவாக, தாய்லாந்திலுள்ள மலேசியர்கள் அனைவரும் E-Konsil இணையப் பக்கத்தில் உடனடியாகப் பதிவுச் செய்யுமாறு விஸ்மா புத்ரா வலியுறுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட அல்லது அவசர உதவி தேவைப்படும் மலேசியப் பயணிகள், பேங்கோக்கில் உள்ள மலேசியத் தூதரகத்தின் அவசர உதவி எண்ணை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



