Latestமலேசியா

528 தமிழ்ப்பள்ளிகளை ஒரே தளத்தில் இணைக்கும் ‘SJKT CONNECT’; புதிய இலக்கவியல் தரவுத்தளம் அறிமுகம்

கோலாலம்பூர், செப்டம்பர்-27,நாடு முழுவதிலும் உள்ள 528 தமிழ்ப்பள்ளிகளின் முழுமையான விவரங்கள், தரவுகள் மற்றும் அண்மையச் செய்திகளை ஒரே குடையின் கீழ் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க “SJKT CONNECT” இலக்கவியல் தரவுத்தளம் கோலாலம்பூர் தம்புசாமிப் பிள்ளை தமிழ்ப்பள்ளியில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் கண்டுள்ளது.

​மலேசியத் தமிழ் அறவாரியமும், இந்திய அரசு சாரா அமைப்புகளின் கூட்டமைப்பான ACE அமைப்பும் இணைந்து இந்த முன்னெடுப்பை ஏற்பாடு செய்துள்ளன.

11 மாநிலங்கள் மற்றும் 122 நாடாளுமன்றத் தொகுதிகளில் செயல்பட்டு வரும் தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் தேவைகள், வசதிக் குறைபாடுகள் மற்றும் சவால்களை AI தொழில்நுட்ப உதவியுடன் துல்லியமாக அடையாளம் காணும் சமூகப் பாலமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

​இத்தளத்தின் வழி நாடாளுமன்ற மக்களவைக் குறிப்புகள் மற்றும் ஊடகச் செய்திகள் பள்ளி வாரியாகத் தொகுக்கப்படுவதுடன், ஒவ்வொரு பள்ளிக்கும் 3 மொழிகளில் சுயவிவரப் பக்கங்களும் உருவாக்கப்படவுள்ளன.

தமிழ்ப்பள்ளிகளின் நிகழ்காலத் தேவைகளை மட்டுமன்றி, எதிர்காலத் தலைமுறையினரின் கல்வித் தரத்தை உறுதிச் செய்யும் நீண்டகாலத் திட்டமாக இது அமையும் என தமிழ் அறவாரியத்தின் தலைவர் மனோகரன் மாரிமுத்து தெரிவித்தார்.

இவ்வேளையில்,​தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சி என்பது வெறும் நிர்வாகத்தின் பொறுப்பு மட்டுமல்ல; அது ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும் என தமிழ் அறவாரியத்தின் முன்னாள் தலைவர் இளஞ்செழியன் வேணுகோபால் வலியுறுத்தினார்.

நம்பகத்தன்மைமிக்க தரவுகள் மூலம் மட்டுமே பள்ளிகளுக்கான தீர்வுகளை நோக்கி நகர முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

​இதனிடையே, இந்த இலக்கவியல் செயலி தமிழ்ப்பள்ளிகளின் அடிப்படைத் தேவைகளையும் நிர்வாக விவகாரங்களையும் இலகுவாகப் பதிவுச் செய்து வெளிப்படைத்தன்மையுடன் கையாளப் பெரிதும் கைகொடுக்கும் என குவாலா சிலாங்கூர், ஹோப்ஃபுல் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியை மகேஸ்வரி சுப்பிரமணியம் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

​இந்நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலில், தமிழ்ப்பள்ளிகளின் நில உரிமைப் பிரச்னைகள், குறைந்த மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பள்ளிகளின் இடமாற்றம் மற்றும் நவீன ஆய்வகக் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

தலைமுறைகள் தாண்டி நிலைத்து நிற்கும் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்தை, தரவுகளின் துணையோடு ஒன்றிணைந்து வடிவமைக்க வேண்டியதன் அவசியத்தை இத்தளம் உறுதிச் செய்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!