
கோலாலம்பூர், நவம்பர் 12 – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக், வீட்டுக் காவலில் இருக்கும்போது தனது குடும்பத்தினருடன் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் (Saifuddin Nasution) தெரிவித்துள்ளார்.
அவரது மனைவி, பிள்ளைகள், மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் அவருடன் தங்கலாம். மற்றவர்கள் அவருடன் தங்கவோ, அவரைப் பார்க்கவோ முன்கூட்டியே எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டும்.
மேலும், சிறைத்துறையில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசியை மட்டுமே நஜீப் பயன்படுத்த வேண்டும். ஊடகங்களிடம் பேசவும், சமூக ஊடகங்களில் பதிவிடவும், பொது நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்கவும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் எதிர்காலத்தில் இதுபோன்ற வீட்டுக் காவல் வழக்குகளுக்கும் வழிகாட்டியாக இருக்கும் என சைஃபுதீன் கூறினார்.
எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் (SRC International) வழக்கில் எஞ்சிய ஆறு ஆண்டு சிறைத் தண்டனையை நஜீப் கடந்த நவம்பர் 10ஆம் தேதி முதல் வீட்டுக் காவலில் அனுபவித்து வருகிறார். அவரது தண்டனை 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி முடிவடைகிறது.



