
பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர்-28 – சொத்து அறிவிப்பு நோட்டீஸ் பெறுவதற்காக, தனது 12 வயது மகனைத் திங்கள்கிழமை காலை எம்ஏசிசி தலைமையகத்துக்கு வருமாறு அழைத்துள்ளதாக முன்னாள் மனிதவள அமைச்சர் எம். சரவணன் தெரிவித்துள்ளார்.
அந்த நோட்டீஸை மகனுக்குப் பதிலாக, பெற்றோரிடம் வழங்கியிருக்கலாம் எனக் கூறிய அவர், குழந்தையை நேரில் வரவழைப்பது தேவையற்ற மனஅழுத்தத்தையும் கவலையையும் ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளதாக FMT செய்தி வெளியிட்டுள்ளது.
தான் காலை 9.30 மணிக்கு எம்ஏசிசி தலைமையகத்துக்குச் சென்று ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் சரவணன் கூறினார். தனக்கு மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
விசாரணைக்கு உட்பட்டவரின் உறவினர்களிடமிருந்து தகவல் கோர எம்ஏசிசி சட்டத்தில் அதிகாரம் இருந்தாலும், குழந்தை தொடர்பான விவகாரத்தில் விவேகத்துடனும் உணர்வுபூர்வமாகவும் செயல்பட வேண்டும் என ம.இ.கா துணைத்தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் வலியுறுத்தினார்.
எம்ஏசிசி தலைவர் அப்துல் ஹலிம் அமான், சரவணன், அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளும் சொத்துகளை அறிவிக்க நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும், அறிவிப்புகளைச் சமர்ப்பிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்றும் முன்பு தெரிவித்திருந்தார்.



