
ஜோகூர் பாரு, செப்-29-ஜோகூர், Taman Sentosaவில் கஞ்சிக் கடை ஒன்றில் வாடிக்கையாளரை இரும்புக்குழாயால் தாக்க முயன்றதுடன், காரை அஜாக்கிரதையாக ஓட்டி மேஜை, நாற்காலிகள் மீது மோதிய சந்தேக நபரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
41 வயதான உள்ளூர் ஆடவர் ஒருவரிடம் இருந்து அச்சம்பவம் குறித்து புகார் பெறப்பட்டதாக தென் ஜோகூர் பாரு மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் Azrul Hisham Mohd Shaffei தெரிவித்தார்.
கஞ்சிக் கடையில் உணவருந்திக் கொண்டிருந்த அவ்வாடவரை சந்தேக நபர் அணுகியதுடன், காரிலிருந்து இரும்புக்குழாயுடன் இறங்கி அவரைத் தாக்க முயன்றுள்ளார். எனினும், அவ்வாடவர் தாக்குதலில் இருந்து தப்பினார்.
மதுபோதையில் இருந்ததாக நம்பப்படும் சந்தேக நபர், அங்கு சிலர் திரண்டதைக் கண்டதும் மீண்டும் காரில் ஏறி அதனை அஜாக்கிரதையாக ஓட்டி, கடையின் மேஜை மற்றும் நாற்காலிகள் மீது மோதிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டம் பிரிவு 279-ன் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது. சந்தேக நபரை அடையாளம் காணும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தகவல் தெரிந்தவர்கள் தென் ஜோகூர் பாரு மாவட்டக் காவல் தலைமையகத்தை 07-2182323 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
சிங்கப்பூர் பதிவு எண் கொண்ட கார் ஒன்று உணவுக் கடையின் மேஜை, நாற்காலிகள் மீது மோதிய காணொளி முன்னதாக சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.



