
மூவார், செப்டம்பர் 30 – மூவார் பகுதியிலுள்ள பள்ளியில், 12 வயது ஆறாம் வகுப்பு மாணவர் ஒருவர் பள்ளிக்கு பட்டாசு கொண்டு வந்த நிலையில் அது வெடித்ததில் உடலில் தீக்காயம் ஏற்பட்டது.
நேற்று காலை 11 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த மாணவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்றார்.
ஆரம்பகட்ட விசாரணையில், சமூக ஊடகம் மற்றும் இணையத்தில் பார்த்த வன்முறை தொடர்பான உள்ளடக்கங்களால் மாணவர் பாதிக்கப்பட்டிருக்கலாமென போலீசார் தெரிவித்தனர். மாணவர் நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புச் சோதனையில் வேறு வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. குழந்தைகள் இணையத்தில் அணுகும் உள்ளடக்கங்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டுமென போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.



