
கோலாலம்பூர், அக்டோபர்-3 – கோலாலம்பூர் Standard Chartered மாரத்தோன் பந்தயத்தில் பங்கேற்ற இருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர்கள் காயமடைந்தனர்.
நேற்று காலை ஜாலான் முன்ஷி அப்துல்லாவில், கூம்புகளால் பிரிக்கப்பட்டிருந்த மாரத்தோன் ஓட்டப் பாதையைக் கடக்க முயன்ற மோட்டார் சைக்கிளோட்டியை நிறுத்துமாறு போலீஸார் உத்தரவிட்டனர்.
எனினும், தப்பியோடும் நோக்கில் எதிர் திசையில் வாகனத்தைச் செலுத்தியபோது, 21 வயதுடைய அந்த இளைஞர் ஓட்டப்பந்தய வீரர்கள் மீது மோதியதாகக் கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமுலாக்கத் துறை கூறியது.
இந்த விபத்தில் 50 வயது பெண் போட்டியாளருக்குக் கழுத்தில் காயம் ஏற்பட்டு பிரின்ஸ் கோர்ட் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வரும் வேளையில், 41 வயது ஆடவருக்கு வலது முழங்கால் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது.
சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டியிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட சுவாசப் பரிசோதனையில், அவர் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக (164mg/100ml) மது அருந்தியிருந்தது உறுதியானது.
தொடர்ந்து, மோட்டார் சைக்கிளோட்டி மற்றும் பின்னால் அமர்ந்து வந்த 19 வயது இளைஞர் ஆகிய இருவரின் இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளைப் பெறுவதற்காக அவர்கள் கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.
மோட்டார் சைக்கிளோட்டிக்கு 3 நாள் தடுப்புக் காவல் உத்தரவும், பின்னால் அமர்ந்து வந்தவருக்கு 2 நாள் தடுப்புக் காவல் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுபோதையில் வாகனமோட்டியது மற்றும் அரசு ஊழியரின் பணியைத் தடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் போலீஸார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, விபத்தில் சாலையில் விழுந்து கிடந்த நபரை மற்ற ஓட்டப்பந்தய வீரர்கள் சூழ்ந்து நின்றதும், போக்குவரத்துப் பிரிவு காவல்துறை அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததும் தொடர்பான ஒரு வீடியோ Threads சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.



