
கோலாலம்பூர், அக்டோபர்-11 – 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச சம்பள உயர்வு, மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் எனப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தபடி, நடப்பிலுள்ள 1,700 ரிங்கிட் குறைந்தபட்ச மாதச் சம்பளம், அடுத்தாண்டு ஜூன் மாதம் முதல் 2,000 ரிங்கிட்டுக்கு உயர்த்தப்படுகிறது.
இதன் மூலம் 4 மில்லியனுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், பட்டதாரிகள் மற்றும் பகுதி திறன் தேர்ச்சித் தொழிலாளர்களுக்கான தொடக்கச் சம்பளம் 2,500 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்படுவதும் வரவேற்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பள உயர்வு, தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களின் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கும் என UiTM பல்கலைக்கழகப் பொருளாதார நிபுணர் Dr முஹமட் ரஹிம் காமிஸ் தெரிவித்தார்.
இதனிடையே, குறைந்தபட்ச சம்பளத்தில் 300 ரிங்கிட் அல்லது 17.6 விழுக்காடு உயர்வானது, உணவு, சில்லறை வணிகம், போக்குவரத்து மற்றும் சேவைத் துறைகளில் உள்நாட்டுத் தேவையை அதிகரிக்கக்கூடும் என மற்றொரு பொருளாதார நிபுணர் நிறைநிலை பேராசிரியர் Dr பார்ஜோயாய் பார்டாய் (Barjoyai Bardai) கூறினார்.
என்றாலும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் புதிய சம்பளக் கட்டமைப்புக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்ள, தொழில்நுட்பம் மற்றும் தொழிலாளர் பயிற்சிக்கான ஆதரவு அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
ஆண்டுக்கு 50 மில்லியன் ரிங்கிட்டுக்கும் குறைவான விற்பனை வருமானம் கொண்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, புதிய குறைந்தபட்ச சம்பள விகிதத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



