
கோலாலம்பூர், அக்டோபர்-24,கோலாலம்பூர், பங்சாரில் உள்ள குப்பை அகற்றும் பகுதியில், 7 மாத பெண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை காலை 10.43 மணியளவில், குப்பைத் தொட்டியில் குழந்தையின் சடலம் கிடப்பதாகப் போலீஸுக்குத் தகவல் கிடைத்தது.
இதனை பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்டப் போலீஸ் தலைவர் துணை ஆணையர் Hoo Chang Hook உறுதிப்படுத்தினார்.
குழந்தையின் சடலம் உடற்கூறு பரிசோதனைக்காகக் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள் போலீஸைத் தொடர்புகொண்டு விசாரணைக்கு உதவுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
பொது மக்கள் 03-2115 9999 என்ற கோலாலம்பூர் போலீஸின் அவசரத் தொடர்பு எண்ணையோ அல்லது 03-2297 9222 என்ற பிரிக்ஃபீல்ட்ஸ் போலீஸ் எண்ணையோ தொடர்புகொள்ளலாம்.



