
பிறை, அக்டோபர்-24,பினாங்கு, பிறையில் உள்ள கம்போங் மானிஸ் குடியிருப்பு மக்களின் ஏறக்குறைய 70 ஆண்டுகால நிலப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் முயற்சியில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆம், அக்டோபர் 18-ஆம் தேதி, பினாங்கு முதலமைச்சர் சாவ் கோன் இயோவ், குடியிருப்பாளர்களுக்கு மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கான விருப்பக் கடிதங்களை வழங்கினார்.
முன்னதாக, குடியிருப்பாளர்கள் Railway Assets Corporation எனப்படும் RAC நிறுவனத்துடன் நிலத்தைக் காலி செய்து மறுகுடியேற்றம் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.


இதனிடையே, முதல்கட்ட கட்டுமானப் பணிகளின் போது தற்காலிகமாக வீடுகளைக் காலி செய்யும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர வாடகை இழப்பீடு, 500 ரிங்கிட்டிலிருந்து 700 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.



தமது பேச்சுவார்த்தையின் மூலம் மேம்பாட்டு நிறுவனத்திடம் இந்த இணக்கத்தைப் பெற்றதாக, வீடமைப்புக்கான பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு சோமு தெரிவித்தார்.

பல தலைமுறைகளாக நீடித்து வரும் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பது தமது முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய, மாநில அரசுகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், கம்போங் மானிஸ் மக்களுக்கு பாதுகாப்பான, வசதியான குடியிருப்புகளை ஏற்படுத்தும் முயற்சி தற்போது முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் சுந்தரராஜு கூறினார்.



