
கோலாலம்பூர், அக்- 28–தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு ஏற்பாடு செய்துள்ள தேசிய அளவிலான தீபாவளிக் கொண்டாட்டம், வரும் நவம்பர் 14-ஆம் தேதி பிரிக்பீல்ட்ஸில் நடைபெறவுள்ளது. அந்நிகழ்வில், 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் R. யுனேஸ்வரன் தெரிவித்தார்.
அக்கொண்டாட்டத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. காலை முதல் இரவு வரை கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் அந்நிகழ்வில் இடம் பெறவுள்ளன. கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுடன், ‘Rumah Malaysia’ எனும் மலேசிய இல்லம் போன்ற தனித்துவமான கண்காட்சிகளும் நடைபெறவுள்ளன.
அக்கொண்டாட்டம் சனிக்கிழமையன்று நடைபெறுவதால், 10,000-க்கும் மேற்பட்டோர் திரளாக வருவார்கள் என நம்புவதாக ஊடகங்களுடனான தேநீர் விருந்து நிகழ்வில் யுனேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதனிடையே, ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் மேம்படுத்த, ஊடகவியலாளர்கள் அமைச்சு மற்றும் தொடர்புடைய துறைகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இனம், மதம், அரச குடும்பம் (3R) தொடர்பான விவகாரங்கள் மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கக்கூடிய விஷயங்களைக் கையாளும்போது பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



