Latestமலேசியா

தீபாவளி கொண்டாட்டம் 2026: ஒற்றுமையை வலியுறுத்தும் தீபாவளியின் ஒளி

புத்ராஜெயா, நவ-06-தீபாவளி கொண்டாட்டங்கள் மலேசியாவின் கலாச்சாரப் பன்முகத்தன்மையையும் பாரம்பரியச் செழுமையையும் வெளிப்படுத்துவதுடன், பல்வேறு இன மக்களிடையே ஒற்றுமையையும் நல்லுறவையும் வலுப்படுத்துவதாக தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் தெரிவித்துள்ளார்.

கோலமிடுதல், அகல் விளக்குகளை ஏற்றுதல், பாரம்பரிய உணவுகளைப் பகிர்ந்து கொள்ளுதல், திறந்த இல்ல உபசரிப்புகளை நடத்துதல் போன்ற தீபாவளி மரபுகள் சமூகங்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவதுடன், வருங்காலத் தலைமுறையினருக்கும் பாதுகாக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட வேண்டிய கலாச்சாரச் சொத்துகளாகும் என அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, தேசிய அளவிலான 2026 தீபாவளிக் கொண்டாட்டம் நவம்பர் 14ஆம் தேதி சனிக்கிழமை கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸில் உள்ள லிட்டில் இந்தியா பகுதியில் நடைபெறவுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வில் சுமார் 5,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு, மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம் (MAICCI) ஆகியவை இணைந்து இதனை ஏற்பாடு செய்கின்றன.

‘தீபாவளியின் ஒளி – ஒற்றுமையின் வழிகாட்டி’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இக்கொண்டாட்டத்தைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடங்கி வைக்கவுள்ளார். இதில் பாரம்பரிய இந்திய நடனங்கள், வீணை மற்றும் மிருதங்க இசை நிகழ்ச்சிகள், சிலம்பம், களரிப்பயட்டு, உள்ளிட்ட தற்காப்புக் கலைகள் மற்றும் ஆடை அலங்கார அணிவகுப்பு இடம்பெறவுள்ளன.

மேலும், Rumah KAMI எனும் சிறப்பு அரங்கம் அமைக்கப்படவுள்ளது. மலாய், சீன, தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, குஜராத்தி மற்றும் மலையாள சமூகங்களின் பாரம்பரியங்களையும் கலாச்சாரங்களையும் இவ்வரங்கம் எடுத்துரைக்கும். Yogi B & Natchatra, Buggimaan, Havoc Brothers, Zubir Khan, காயத்ரி தண்டபாணி, காஷ்மீர் ஸ்டோன் மற்றும் குமரேஷ் உள்ளிட்ட உள்ளூர் கலைஞர்களும் நிகழ்ச்சிகளைப் படைக்கவுள்ளனர்.

மலேசியாவின் பன்முகத்தன்மையே நாட்டின் பலம் என்றும், ஒவ்வொரு பண்டிகையும் வெவ்வேறு சமூகத்தினர் ஒருவரையொருவர் அறிந்து கொண்டு, புரிந்து கொண்டு மதிப்பதற்கான வாய்ப்பை வழங்குவதாகவும் ஆரோன் தெரிவித்தார். எனவே, இனம், மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மலேசியர்களும் இக்கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு ஒற்றுமையைக் கொண்டாடுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!