
குவாந்தான், நவம்பர்-14 – புனித குர்ஆனை அவமதித்தது மற்றும் சமூக வலைத்தளங்களில் புண்படுத்தும் வகையிலான பதிவுகளை வெளியிட்ட வழக்கில், பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒருவருக்குக் குவாந்தான் செஷன்ஸ் நீதிமன்றம் 12 மாத சிறைத் தண்டனையும், 250,000 ரிங்கிட் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
21 வயது S.விக்னேஸ்வரன், குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து உடனடியாகச் சிறைத் தண்டனையை அனுபவிக்கத் தொடங்கினார்.
கடந்த பிப்ரவரி மாதம், அவர் குர்ஆனை மிதிக்கும் வீடியோ ஒன்று ‘Threads’ சமூக ஊடகத்தில் வைரலானதை அடுத்து இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
குடும்பத்தினர் அவரிடம் விசாரித்தபோது அவர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அவரது தந்தையே போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார்.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இது ஒரு கடுமையான எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தீர்ப்பின் போது நீதிபதி தெரிவித்தார்.
இந்நிலையில், குறிப்பிடத்தக்க காரணங்கள் எதுவும் இல்லை எனக் கூறி, மேல்முறையீடு செய்யும் வரை தண்டனையை ஒத்திவைக்கக் கோரிய விக்னேஸ்வரனின் வழக்கறிஞரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.



