
மணிலா, நவம்பர்-16,இந்தோனேசியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக மலேசியா மற்றும் சிங்கப்பூரில் கடுமையான புகைமூட்டம் ஏற்பட்டதற்காக, அந்நாட்டு அதிபர் பிராபோவோ சுபியாந்தோ மன்னிப்புக் கேட்டுள்ளார்.
பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற ஆசியான் உச்சநிலை மாநாட்டில், இந்தோனேசிய அரசாங்கத்தின் சார்பில் அவர் மன்னிப்புக் கோரினார்.
கடந்த 4 மாதங்களாக இந்தோனேசியாவில் நீடிக்கும் காட்டுத் தீ, கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக சுமத்ரா, போர்னியோ மற்றும் பாப்புவா தீவுகளில் பெரும் நிலப்பரப்புகள் தீக்கிரையாகியுள்ளன.
இதனால் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட அண்டை நாடுகளில் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டு காற்றின் தரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், காட்டுத் தீ சம்பவங்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த மணிலா மாநாட்டில் பிராபோவோ உறுதியளித்தார்.
இதுவரை 17 நிறுவனங்களின் உரிமங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 104 நிறுவனங்கள் மீது போலீஸ் விசாரணை நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.
காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த 71 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
எதிர்காலத்தில் காட்டுத் தீ ஏற்படுவதைத் தடுக்க புதிய அமைப்பு ஒன்றை நிறுவவும் இந்தோனேசியா திட்டமிட்டுள்ளது என்றார் அவர்.



