
சரவாக், நவம்பர் 16 – சரவாக் கூச்சிங்கில் ஆசிரியரை கோடரியால் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 16 வயது மாணவர், மனநலப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளார்.
இன்று கூச்சிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அந்த மாணவர் மீது, சட்டவிரோத நோக்கத்துடன் கோடரி வைத்திருந்தது, கோடரியால் 42 வயது ஆசிரியரைக் காயப்படுத்தியது மற்றும் வெடிபொருட்களை வைத்திருந்தது என மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இருப்பினும், குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது அவர் தரப்பில் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் மனநலப் பரிசோதனைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
கடந்த அக்டோபர் 21ஆம் தேதி காலை 7.50 மணியளவில், ஜாலான் குச்சிங்-சமரஹான் (Kuching-Samarahan) பகுதியிலுள்ள சர்வதேசப் பள்ளியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்கள், பாதுகாவலர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் மாணவரின் பெற்றோர் உட்பட 38 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.



