
கோத்தா பாரு, நவ.17-சமூக வலைத்தளங்களில் வைரலான தலை இல்லாத கோழிகள் முறையாக அறுக்கப்பட்டவையே என கிளந்தான் மாநில இஸ்லாமிய மத விவகாரத் துறையான Jaheaik உறுதிப்படுத்தியுள்ளது.
இணையத்தில் பரவிய புகார்களைத் தொடர்ந்து, உள்நாட்டு வாணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் (KPDN) கிளந்தான் கிளையும் Jaheaikக்கும் இணைந்து உள்ளூர் பல்பொருள் பேரங்காடியொன்றில் ஆய்வுகளை மேற்கொண்டன.
அக்கோழிகள் ஏற்கெனவே பொட்டலமிடப்பட்டு அப்பேரங்காடிக்கு விநியோகிக்கப்பட்டதாக கிளந்தான் KPDN இயக்குநர் Hanif Yusabra Yusuf தெரிவித்தார். மேலும், பரிசோதனைக்காக கோழியின் மாதிரி ஒன்றை Jaheaik சேகரித்ததாகவும் அவர் கூறினார்.
ஆய்வில், கோழிகள் முறையாக அறுக்கப்பட்ட பின்னரே, Head Puller எனும் இயந்திரம் மூலம் அவற்றின் தலை அகற்றப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. அது வழக்கமாகப் பயன்படுத்தப்படும் முறையாகும். சம்பந்தப்பட்ட விநியோகஸ்தரின் ஹலால் சான்றிதழ்களும் ஆய்வுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டதாக Hanif Yusabra Yusuf குறிப்பிட்டார்.
பயனீட்டாளர் நலன் தொடர்பான புகார்களையும் பரவலாகப் பகிரப்படும் விவகாரங்களையும் அதிகாரிகள் தீவிரமாகக் கையாள்வதாகக் குறிப்பிட்ட அவர், சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்ப வேண்டாம் என பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார். அதோடு ஊகங்களின் அடிப்படையில் முடிவுக்கு வராமல் ஆய்வு முடிவுகளுக்காகக் காத்திருக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.



