
பெர்லிஸ், அராவ், நவம்பர் 20 – சுங்கை பட்டானியிலிருந்து பெர்லிஸ் அராவ் (Arau) நோக்கிச் சென்ற கொமியூட்டர் ரயிலில் வேப் (Vape) பயன்படுத்திய 22 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து எம்.டி.எம்.ஏ (MDMA) போதைப்பொருள் கலந்திருக்கலாமெனச் சந்தேகிக்கப்படும் 15 திரவக் கெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த புதன்கிழமை ரயில் அராவ் நிலையத்தை வந்தடைந்தபோது, ரயில்வே பாதுகாப்புப் பணியாளர்கள் அவரைக் கைது செய்து, இரவு 8.40 மணிக்கு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட திரவத்தின் மொத்த எடை 0.75 கிராம் என்றும், அதன் மதிப்பு 1,500 ரிங்கிட் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அந்தப் பொருட்கள் தமக்குச் சொந்தமானவை என ஒப்புக்கொண்ட சந்தேகநபர், சுங்கை பட்டானியிலுள்ள தாமான் ஆர்க்கிட் (Taman Arkid) பகுதியிலுள்ள ஆடவர் ஒருவரிடமிருந்து அவற்றைப் பெற்றதாகக் கூறியுள்ளார்.
அவரது சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்பாடு இல்லை என்பதும், முந்தைய குற்றப் பதிவுகள் இல்லை என்பதும் தெரியவந்தது. இருப்பினும், ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக அவர் நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.



