
கோலாலம்பூர், நவம்பர்-20,தெருவில் திரியும் நாய்கள் மற்றும் பூனைகளின் நலனைப் பாதுகாக்க அரசாங்கம் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மக்களவையில் 2027 பட்ஜெட் விவாதத்தில் பேசிய அவர், ஆதரவற்ற விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக, தெருநாய்கள் மற்றும் பூனைகள் நலன்களைப் பாதுகாப்பதில் அரசாங்கம் எடுத்துள்ள, எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் வினவினார்.
ஆளுங்கட்சி தரப்பில் வேறு எவரும் இவ்விவகாரம் குறித்து பேசுவதில்லை என்றும் ராயர் குறைப்பட்டுக் கொண்டார்.
தெரு விலங்குகளால் அவ்வப்போது குடியிருப்பாளர்கள் சந்திக்கும் இடையூறுகள் புரிந்துகொள்ளக் கூடியவை தான்.
அதேசமயம், அந்த வாயில்லா ஜீவன்களின் வாழ்வுரிமையையும் நாம் மறந்து விடக் கூடாது.
எனவே, விலங்குகள் நல அமைப்புகளுடன் இணைந்து, ஊராட்சி மன்றங்கள் சிறந்த தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதும் அவரது கோரிக்கைகளில் ஒன்றாகும்.
‘கோப்பி’, ‘ராக்கி’ போன்ற தெருநாய்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்களும், பிப்கப் லாரியில் கயிற்றால் கழுத்தில் கட்டி பூனை தொங்கியவாறே கொண்டுச் செல்லப்பட்ட சம்பவமும் நாட்டில் மீண்டும் நிகழக்கூடாது என்றார் அவர்.
தெரு பிராணிகள் குறிப்பாக நாய்களைக் கையாள்வதில் பினாங்கு மாநகர மன்றம் ஒரு முன்மாதிரியாக இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
மகாத்மா காந்தியின் பெயரில் பரவலாக மேற்கோள் காட்டப்படும்,
“ஒரு நாடு எவ்வளவு சிறந்தது என்பதை, அந்நாடு தனது விலங்குகளை எவ்வாறு நடத்துகிறது என்பதைக் கொண்டு மதிப்பிடலாம்”
என்ற பொன்மொழியையும் ராயர் நேற்றைய விவாதத்தில் சுட்டிக்காட்டினார்.
இதற்கு முன்பும் நாடாளுமன்றத்தில் விலங்குகள் நலன் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை ராயர் எழுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.



