Latestமலேசியா

மருத்துவமனையிலிருந்தே முழங்கிய தீபிகாவின் குரல்! ‘மாணவர் முழக்கம்’ அரையிறுதியில் நெகிழ்ச்சி

நான்கைந்து நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோதும், ‘மாணவர் முழக்கம்’ அரையிறுதியில் பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் தீபிகா ஆன் பிரகாஷ். சிலாங்கூர் வெஸ்ட் கன்ட்ரி (திமூர்) தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த இந்த மாணவி, நேற்று நடைபெற்ற வணக்கம் மலேசியாவின் 14-ஆவது ‘மாணவர் முழக்கம்’ பேச்சுப் போட்டியில் மருத்துவமனையிலிருந்தே தனது வாதத்தை முன்வைத்தார்.

அரையிறுதியில் இரு மாணவர்கள் ஒரே தலைப்பில் வெவ்வேறு நிலைப்பாடுகளை எடுத்துப் பேசினர். தீபிகாவுக்கு அமைந்த தலைப்பு, ‘பகடிவதையில் ஈடுபடும் மாணவர்களைப் பள்ளியிலிருந்து நீக்குவது கட்டாயமா?’ என்பது. பகாங் பெந்தோங் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த அயிலவன் வேல் பாரதி செந்தில் குமரன், பள்ளியிலிருந்து நீக்குவது கட்டாயம் என்ற தரப்பில் பேசினார். நீக்குவது கட்டாயமில்லை என்ற தரப்பில் வாதிட்டார் தீபிகா. மருத்துவமனையில் இருந்த நாட்களிலேயே தன் உரைக்குத் தயாரான தீபிகா, உற்சாகத்துடன் பேசியது அரையிறுதியின் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.

இவ்வாண்டு நாடு முழுவதுமுள்ள தமிழ்ப்பள்ளிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தகுதிச் சுற்றுக்குத் தங்கள் பேச்சுக் காணொளிகளை அனுப்பியிருந்தனர். அவர்களில் 98 பேர் காலிறுதிக்குத் தேர்வாகினர். அச்சுற்றைக் கடந்து நேற்று அரையிறுதியில் பங்கேற்ற 24 பேரில் தீபிகாவும் ஒருவர்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பேச்சாற்றலை வளர்க்க வணக்கம் மலேசியா ஆண்டுதோறும் நடத்தும் ‘மாணவர் முழக்கம்’, இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம் பேச்சாளர்களை உருவாக்கியுள்ளது. தேசிய, அனைத்துலக அளவில் வரவேற்பைப் பெற்றுள்ள இப்போட்டியில், மாணவர்கள் ஒரு விவகாரத்தை எவ்வளவு ஆழமாக ஆராய்கிறார்கள், தங்கள் நிலைப்பாட்டுக்கு என்ன காரணங்களை முன்வைக்கிறார்கள், அவற்றை எவ்வளவு தெளிவாக எடுத்துரைக்கிறார்கள் என்பதும் மதிப்பிடப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!