Latestமலேசியா

மாணவர் முழக்கம் 2026; மாபெரும் இறுதிச் சுற்றுக்கு சிலாங்கூரிலிருந்து இருவர், ஜோகூரிலிருந்து இருவர் தேர்வு !

ஒரு தலைப்பைக் கொடுத்தால், அதைப் பற்றி இந்த மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள்? அந்தக் கணத்தில் தோன்றும் எண்ணத்தை, அரங்கில் உள்ள அனைவருக்கும் புரியும்படி எப்படிச் சொல்கிறார்கள்? நாளை ஒரு தலைவராக முடிவெடுக்க வேண்டியிருந்தால், ஒரு பிரச்சினையை எந்தக் கோணத்தில் அணுகுவார்கள்? தமிழ்ப்பள்ளி மாணவர்களிடம் இத்தகைய திறன்களை வளர்க்க வணக்கம் மலேசியா உருவாக்கிய மேடைதான் ‘மாணவர் முழக்கம்’.

இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இளம் பேச்சாளர்களை உருவாக்கியுள்ள இந்தத் தேசிய அளவிலான தமிழ்ப் பேச்சுப் போட்டி, இந்த ஆண்டு தனது 14-ஆவது ஆண்டை எட்டியுள்ளது.

2026-ஆம் ஆண்டுக்கான போட்டியில், காலிறுதிச் சுற்றைக் கடந்து 24 மாணவர்கள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில் கடந்த நவம்பர் 21-ஆம் தேதி நடைபெற்ற அரையிறுதியில், அவர்களிலிருந்து நால்வர் மாபெரும் இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகியுள்ளனர்.

இதோ, இந்த ஆண்டின் ‘மாணவர் முழக்கம்’ பட்டத்துக்காக மேடையேறவிருக்கும் அந்த நான்கு இளம் பேச்சாளர்கள் இவர்கள்தான்.

இதனிடையே, வரும் டிசம்பர் 5-ஆம் தேதி, தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறும் மாபெரும் இறுதிச்சுற்றில், தங்களுக்கு வழங்கப்படும் தலைப்பில் இந்த நால்வரும் தங்களின் அனல் பறக்கும் வாதத்தினை முன்வைக்கவிருக்கின்றனர்.

இவர்களிலிருந்து முதலிடம் பெறும் மாணவருக்கு மூவாயிரம் ரிங்கிட் ரொக்கம், வெற்றிக் கோப்பை மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்படும்.

இரண்டாம் இடத்துக்கு இரண்டாயிரம் ரிங்கிட் ரொக்கம், கோப்பை மற்றும் நற்சான்றிதழும் மூன்றாம் இடத்துக்கு ஆயிரம் ரிங்கிட்டும், நான்காம் இடத்துக்கு எழுநூறு ரிங்கிட்டும் ரொக்கப் பரிசாக வழங்கப்படவிருக்கிறது.

இந்நிலையில், அதே மேடையில், அரையிறுதியில் தங்கள் பேச்சாற்றலால் கவனம் ஈர்த்த மேலும் பத்து மாணவர்கள் ‘நம்பிக்கைப் பேச்சாளர்’ என்ற சிறப்பு அங்கீகாரத்தைப் பெறவுள்ளனர். தங்கள் பேச்சாற்றலைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளவும், அடுத்த போட்டியில் இன்னும் அதிக நம்பிக்கையுடன் மேடையேறவும் இந்த அங்கீகாரம் அவர்களுக்கு ஊக்கமாக அமையும். இவர்களுக்கான பரிசளிப்பும் டிசம்பர் 5-ஆம் தேதியே நடைபெறும்.

நம் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் குரல் உலகெங்கும் ஒலிக்க வேண்டும் என்பதே வணக்கம் மலேசியாவின் விருப்பம். இந்த ஆண்டு அந்த முயற்சியில் ‘வணக்கம் மேக்ஸ்’ ஓடிடி தளமும் இணைந்துள்ளது. மலேசிய இளையோரின் திறமைகளை உலகெங்கும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதே இத்தளத்தின் நோக்கம்.

ஒரு தமிழ்ப்பள்ளி வகுப்பறையில் தன் கருத்தைச் சொல்லக் கை உயர்த்திய மாணவர், நாளை உலகெங்கும் உள்ள தமிழர்களைத் தன் பேச்சால் சிந்திக்க வைக்கலாம். அந்தப் பயணத்தின் அடுத்த மேடை, டிசம்பர் 5-ஆம் தேதி கோலாலம்பூரில். நம் இளம் பேச்சாளர்களைக் கொண்டாட ஒன்றிணைவோம்!

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!