சுங்கை பாக்காப், ஜூன்-23,
இந்தியத் தொழில்முனைவோர்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு பேங் ராக்யாட் வழங்கும் 50 மில்லியன் ரிங்கிட் BRIEF-i கடனுதவித் திட்டம் குறித்து, சமூக ஊடகங்களில் ஒரு சிலரால் விஷமப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஹலால் முத்திரை இல்லாவிட்டாலோ அல்லது கடைகளில் சாமி படங்கள் இருந்தாலோ அக்கடனுதவி கிடைக்காது என அவர்கள் பேசி வருவதில் உண்மையில்லை என, தொழில்முனைவோர் – கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெளிவுப்படுத்தினார்.
ஹலால் சான்றிதழ் இல்லாதவர்களும் இணையம் வாயிலாகத் முதலில் விண்ணப்பிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
விதிமுறைகளைப் பூர்த்திச் செய்த விண்ணப்பங்கள் கண்டிப்பாக பரீசீலிக்கப்படும் என டத்தோ ரமணன் உத்தரவாதம் அளித்தார்.
இவ்வேளையில், வர்த்தகம் இஸ்லாமியர்களையும் சென்றடைந்து சந்தை வாய்ப்பு பெருகும் என்றால், உணவு மற்றும் பானங்கள் விற்கும் துறையில் ஈடுபட்டுள்ள நம்மவர்கள் ஹலால் முத்திரையைப் பெறுவதில் தவறேதுமில்லை என்றார் அவர்.
இந்த BRIEF-i திட்டம் தொடங்கிய 10 நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்; அவர்களில் 114 பேர் உணவக நடத்துனர்கள் ஆவர்.
இப்படி அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் மக்களை குறிப்பாக இந்திய சமூகத்தைச் சென்றடைந்து வருவதைப் பொறுக்க முடியாதோர் அதனைக் கெடுப்பதற்காகவே அது போன்ற விஷமப் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர்.
மக்கள் நலத்திட்டங்களுக்கு இனவாத முத்திரைக் குத்தி மக்களையும் குழப்பி வருவோருக்கு எதிராக தேவைப்பட்டால் போலீசில் புகார் செய்யப்படும் என்றும் டத்தோ ரமணன் எச்சரித்தார்.
பினாங்கு, சுங்கை பாக்காப்பில் மித்ரா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தியச் சமூகத்துடனான சிறப்பு சந்திப்புக் கூட்டத்தில் துணையமைச்சர் பேசினார்.
அதில் கல்வியமைச்சர் ஃபட்லினா சீடேக் (Fadhlina Sidek) மற்றும் சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி வேட்பாளர் Dr ஜூஹாரி அரிஃபினும் (Dr Joohari Ariffin) ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.