கோலாலம்பூர், மே-10, சிலாங்கூர் கால்பந்தாட்டக்காரர் Faisal Halim மீதான எரிதிராவக வீச்சு தொடர்பில் தேவையின்றி அரண்மனையை இழுக்க வேண்டாம் என நெட்டிசன்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்தாக்குதலை விசாரிப்பது போலீசின் வேலை; நெட்டிசன்களின் வேலை அல்ல என தேசியப் போலீஸ் படைத் தலைவர் Tan Sri Razarudin Husain கூறினார்.
யூகங்களை எழுப்பி நிலைமையை மோசமாக்க வேண்டாம் என தொடக்கத்தில் இருந்தே தாம் நினைவுறுத்தி வந்துள்ள போதும், யாரும் அதனைக் கேட்பதாகத் தெரியவில்லை என அவர் ஏமாற்றம் தெரிவித்தார்.
நெட்டிசன்களின் யூகங்கள் அரண்மனை வட்டாரங்களை இழுக்கும் வரை சென்று விட்டது; இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
போலீசுக்கே இன்னும் முழுமையாகத் துப்புத் துலங்கவில்லை; இதில் ஆதாரங்கள் என்ற பெயரில் நெட்டிசன்களுக்கு எங்கிருந்து தான் தகவல்கள் கிடைக்கின்றன என்பது தமக்கு ஆச்சரியமாக இருப்பதாக IGP நகைப்புடன் கேட்டார்.
சமூக ஊடகங்களில் முளைக்கும் அனைத்தும் புகார்களையும் விசாரிப்பதென்பது இயலாத காரியம்; என்றாலும் அடிப்படை இருப்பதாகக் கண்டறியப்படும் புகார்கள் நிச்சயம் விசாரிக்கப்படும் என IGP உறுதியளித்தார்.
Faisal Halim மீதான acid தாக்குதல், அதையடுத்து ரத்தாகியுள்ள சிலாங்கூர் – ஜொகூர் இடையிலான Sumbangsih கிண்ண கால்பந்தாட்டம் ஆகியவற்றை வைத்து, குறிப்பிட்ட சில நெட்டிசன்கள் ஒரு மாநிலத்தின் அரண்மனையை வம்புக்கிழுப்பது குறித்து IGP கருத்துரைத்தார்.