
கோலாலம்பூர், ஆகஸ்ட்.20-கோலாலாம்பூர், Jalan Sultan Ismailலில் உள்ள Maju சந்திப்புப் பகுதியில் நிகழ்ந்த உயிரிழப்பை ஏற்படுத்திய சாலை விபத்து தொடர்பில் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை குடிநுழைவுத் துறையின் லாரி ஓட்டுநர் ஒருவர் மறுத்திருக்கிறார்.
43 வயதான Mohd Akbar Zainolலுக்கு எதிராக போக்குவரத்து சமிக்ஞைகளைப் பின்பற்றாதது உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகள் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன.
எனினும் அக்குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், தாம் குற்றமற்றவர் என வாதிட்டார். Mohd Akbar குடிநுழைவுத் துறையில் 11 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் என்றும், அவருக்கு முந்தைய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அனைத்து ஐந்து குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து 60,000 ரிங்கிட் பிணைத் தொகையை நீதிமன்றம் அனுமதித்தது.
அதோடு அவர் மாதத்திற்கு ஒருமுறை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும், வழக்கு முடியும் வரை அவரது ஓட்டுநர் உரிமம் மற்றும் கடப்பிதழ் ஆகியவை தற்காலிகமாக முடக்கப்படும் என கூடுதல் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. வழக்கு மீண்டும் அக்டோபர் 27 ஆம் தேதி விசாரிக்கப்படவிருக்கிறது.
நேற்று அதிகாலை Maju சந்திப்புப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்த குடிநுழைவுத் துறையின் லாரியொன்று மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததாக முன்னதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
மூன்று வாகனங்களும் நான்கு பாதசாரிகளும் அதில் சம்பந்தப்பட்டிருந்தனர். மூன்று பாதசாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதிகாலை ஒரு மணியளவில் அந்த Isuzu “Black Maria” ரக லாரி கோலாலம்பூர் குடிநுழைவு அலுவலகத்திலிருந்து Chow Kit நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது அவ்விபத்து நிகழ்ந்ததாக கோலாலம்பூர் காவல் தலைமையகத்தின் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர் உதவி ஆணையர் Mohd Zamzuri Mohd Isa தெரிவித்தார்.



