Latestஉலகம்

உணவுப் பொருட்களுடன் 2 வாரங்களாக வைக்கப்பட்ட கால் விரல்; சியோல் மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்!

சியோல், ஆகஸ்ட்.20-தென் கொரியா, சியோலில் உள்ள ஒரு பராமரிப்பு மருத்துவமனையின் சமையலறை குளிர்சாதனப் பெட்டியில் நோயாளி ஒருவரின் துண்டிக்கப்பட்ட கால் விரல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்தக் கால் விரல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய கஞ்சி வைக்கும் கலனில் வைக்கப்பட்டு, குளிர்பானங்கள் மற்றும் உணவுப் பொருட்களுடன் சேர்த்து சுமார் இரண்டு வாரங்களாகக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.

சம்பந்தப்பட்ட நோயாளியின் குடும்பத்தினர் அவரைச் சந்திக்க வந்த போது அவ்விஷயம் அம்பலமானது.

அந்தக் கால் விரல், கடந்த 10 ஆண்டுகளாக அந்த மருத்துவமனையில் தங்கியிருக்கும் 60 வயது மதிக்கத்தக்க மாற்றுத் திறனாளியினுடையது என நம்பப்படுகிறது. அவரது கால் விரல் ஒன்று துண்டிக்கப்பட்டிருந்தது பற்றி கடந்த மார்ச் மாதம்தான் தங்களுக்குத் தெரிய வந்ததாக அந்நோயாளியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

​​குளிப்பாட்ட சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்பட்ட போது அந்நபர் கீழே விழுந்ததாகவும், அதனால் பாதிப்புக்குள்ளான கால் விரல் துண்டிக்கப்பட்டதாகவும் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவருக்குக் காலில் புண் இருப்பது குறித்து மருத்துவக் குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அது பற்றித் தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் அந்நோயாளியின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

மருத்துவக் கழிவுகளை அதற்கென ஒதுக்கப்பட்ட சிறப்பு கொள்கலன்களில் சேமிக்க வேண்டும் என்பது தென் கொரியாவின் கழிவுக் கட்டுப்பாட்டுச் சட்டமாகும்.

இருப்பினும், அக்கால் விரலைச் சேமிக்கத் தகுந்த கொள்கலன் தங்களிடம் இல்லை எனவும் தற்காலிகமாக அது குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டதாகவும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்நிலையில் அப்பொறுப்பற்ற செயல் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!