Latestசிங்கப்பூர்மலேசியா

ஜோகூர் பாருவில் நடுரோட்டில் வன்முறையாக மாறிய தகராறு; சிங்கப்பூர் ஆடவர், உள்ளூர் இளைஞர் மீது குற்றச்சாட்டு

ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-20- ஜோகூர் பாருவில் சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் மீது காவல்துறையினரின் பணிகளுக்கு இடையூறாக இருந்தது, ஆபத்தான ஆயுதத்தை வைத்திருந்தது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. முறையான அனுமதியின்றி 8.5 சென்டிமீட்டர் நீளமுள்ள கத்தியை வைத்திருந்ததாகத் தம் மீது கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை Gary Lim Kian Liang எனும் அந்த 46 வயது ஆடவர் மறுத்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் Sultan Iskandar கட்டிடம் நோக்கிச் செல்லும் Jalan Lingkaran Dalam பகுதியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தின் போது அவர் அந்த ஆயுதத்தை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகள் வரையிலும், சில சூழல்நிலைகளில் 10 ஆண்டுகள் வரையிலும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

இவ்வேளையில், காவல் துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தது மற்றும் காயம் ஏற்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளையும் Lim எதிர்நோக்கினார். அவற்றையும் மறுத்து அவர் விசாரணை கோரினார். காவல் துறையினரின் பணிகளுக்கு இடையூறை ஏற்படுத்தியதற்காக அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 10,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது அவை இரண்டுமே விதிக்கப்படலாம். கடந்த சனிக்கிழமை உள்ளூர் பெண்ணுக்கு ஆபத்தான ஆயுதத்தைக் கொண்டு வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டு நிரூபணமானால் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது இவற்றின் கலவையான தண்டனைகள் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் உணவக உரிமையாளராக இருக்கும் Lim, தொடர் சிகிச்சை தேவைப்படும் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திருமணமான அவர் தமது வயதான தாயாரைக் கவனிக்க வேண்டியிருப்பதாகவும் கூறப்பட்டதை அடுத்து மூன்று உள்ளூர் ஜாமீன்தாரர்களுடன் 20,000 ரிங்கிட் பிணைத் தொகை நிர்ணயிக்கப்பட்டது. செப்டம்பர் 25-ஆம் தேதி அவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இவ்வேளையில் அதே வழக்கு தொடர்பில், மோட்டார் சைக்கிள் ஹெல்மெட்டைப் பயன்படுத்தி அந்த சிங்கப்பூர் ஆடவருக்குக் காயம் ஏற்படுத்தியதாக தம் மீது கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை 28 வயதான உள்நாட்டவரான ஜி. தினேஷ் குமார் மறுத்து விசாரணை கோரினார். அவருக்கு ஓர் உள்ளூர் ஜாமீனுடன் 5,000 ரிங்கிட் பிணை தொகை விதிக்கப்பட்டது. அவ்வழக்கு செப்டம்பர் 14 ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்படும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிகழ்ந்த கைகலப்பின் போது, ​​காவல்துறை நான்கு பேரைக் கைது செய்ததாக இதற்கு முன் செய்தி வெளியாகியிருந்தது. அச்சம்பவம் தொடர்பான காணொளியும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!