Latestஉலகம்

ஜப்பானில் தண்டவாளப் பணியின்போது விபத்து; ரயில் மோதி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

தோக்யோ, ஆகஸ்ட்-20-ஜப்பானில் தோக்யோவிற்கு வடக்கே Shin-Kanuma எனுமிடத்தில் ரயில் மோதியதில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ரயில் தண்டவாளத்தில் இருந்த களைகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது அவ்விபத்து நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தகவல் கிடைத்து அங்கு சென்ற போது, மூன்று தொழிலாளர்கள் ரயிலுக்கு அடியில் சிக்கியிருந்ததாகவும், ஒருவர் நடைபாதையில் கிடந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். அவ்விபத்து காரணமாக Tobu Nikko வழித்தடத்தில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அவ்விபத்துக்கு முன் ஒரு விசித்திரமான சத்தம் கேட்டதாக, ரயிலில் இருந்த பயணி ஒருவர் தமது அனுபவத்தைக் கூறியுள்ளார். அச்சத்தம் குறித்து ஆய்வு செய்வதாக ஊழியர்கள் அறிவித்ததால், பயணிகள் சிறிது நேரம் ரயிலுக்குள்ளேயே காத்திருக்க வேண்டியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

தண்டவாளத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரயில்கள் குறித்து எச்சரிக்கை வழங்கப்படுவது வழக்கம். எனினும் அவ்விபத்தின் போது என்ன நிகழ்ந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

விபத்துக்குள்ளான ரயில் Limited Express express வகையைச் சேர்ந்தது என்றும் ‘புல்லட் ரயில்’ என்று அழைக்கப்படும் Shinkansen ரயில்களுக்கு அடுத்து, ஜப்பானில் அதிவேகமாகச் செல்லும் ரயில் அதுவென்றும் கூறப்படுகிறது.

பரந்து விரிந்த ரயில்வே கட்டமைப்பைக் கொண்ட ஜப்பானில் உயிரிழப்பை ஏற்படுத்தும் ரயில் விபத்துகள் நிகழ்வது மிகவும் அரிதாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!