சிங்கப்பூர், செப்டம்பர் 5 – சிங்கப்பூரில் குரங்கம்மை எனும் Mpox தொற்று ஏற்படக்கூடிய அபாயத்திலிருக்கும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும், தொற்று நோயாளிகளின் நெருங்கிய தொடர்பாளர்களுக்கும் Jynneos தடுப்பூசி வழங்கப்படும் என அதன் சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கிறது.
சிங்கப்பூரில் Mpox மற்றும் பெரியம்மை நோய்த்தொற்றுகளுக்கு எதிரான பாதுகாப்பிற்காக Jynneos தடுப்பூசி பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சின் படி, கிளேட் I (clade 1) Mpox தொற்றைச் சமாளிப்பதற்கான நாட்டின் பொது சுகாதார முன்னெடுப்புகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
ஒவ்வொரு நெருங்கிய தொடர்பும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் போது, நோய்த்தொற்றுக்கு ஆளான 14 நாட்களுக்குள், நோய் தாக்கும் அபாயத்தைக் குறைக்க, தடுப்பூசியின் ஒரு டோஸ் வழங்கப்படும்.
இதுவரை, சிங்கப்பூரில் கண்டறியப்பட்ட 14 Mpox நோய்த்தொற்று சம்பவங்களும், அதிகக் கடுமையற்ற கிளேட் 2 (clade 2) ரகத்தைச் சேர்ந்தவை.