
கோலாலும்பூர், மே-11-டூத்தா சுங்கச்சாவடியை நோக்கிச் செல்லும் புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலையில் (NKVE) மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அந்த விபத்தில் சம்பந்தப்பட்ட Proton Inspira வாகன ஓட்டுநரை அலட்சியம் மற்றும் அபாயகரமாக வாகனம் ஓட்டியதற்காக காவல்துறை கைது செய்துள்ளது.
கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர் உதவி ஆணையர் முகமட் சம்சுரி முகமட் ஈசா கூறுகையில், மே 9 ஆம் தேதி இரவு சுமார் 11 மணியளவில் NKVE-யின் 28வது கிலோமீட்டரில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவித்தார்.
இந்த விபத்தில் Toyota Hilux, Proton Wira மற்றும் Proton Inspira ஆகிய வாகனங்கள் சம்பந்தப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.
தொடக்கக்கட்ட விசாரணையின் போது 26 வயது உள்ளூர் இளைஞர் ஓட்டிய Proton Inspira வாகனம் நெடுஞ்சாலையில் சறுக்கி வலதுபுறப் பாதையில் நின்றதால் அதை தொடர்ந்து வந்த 40 வயதுடைய இந்தோனேசிய ஆடவர் ஓட்டிய Proton Wira மற்றும் 41 வயது உள்ளூர் ஆடவர் ஓட்டிய Hilux வாகனமும் ஒன்றன் பின் ஒன்றாக அந்த Inspira வாகனத்தின் மீது மோதின.
இதன் காரணமாக இரண்டு வாகனங்களும் சாலையின் இடதுபுறமாக விலகி, சாலைத் தடுப்பில் மோதின.
மூன்று வாகன ஓட்டுநர்களும் காயமின்றி தப்பிய நிலையில் இச்சம்பவத்தில் Proton Wira மற்றும் Toyota Hilux வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
Proton Inspira வாகனத்திற்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு குறித்து இன்னும் விசாரணை நடைபெற்று வருவதாக சம்சுரி தெரிவித்திருக்கிறார்.



