
உலு சிலாங்கூர், நவ 12-சிலாங்கூர், Kampung Pertak, Sungai Liutடில் ஏற்பட்ட திடீர் நீர் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் ஒருவரின் உடல், இன்று காலை சுங்கை சிலாங்கூர் அணைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது.
இன்று காலை சுமார் 10.15 மணியளவில் கண்டெடுக்கப்பட்ட அந்தச் சடலம் யாருடையது என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. எனவே மேலதிக நடவடிக்கைகளுக்காக அச்சடலம் சம்பவ இடத்தின் கட்டுப்பாட்டு மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இவ்வேளையில், அச்சடலம் கண்டெடுக்கப்பட்டதன் வழி, அப்பேரிடரில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. மேலும் இருவர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்களைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே, துர்நாற்றம் வீசுவதாகத் தகவல் கிடைத்திருப்பதைத் தொடர்ந்து, இன்றைய தேடல் மற்றும் மீட்புப் பணிகள் A பகுதியில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் Ashrul Riezal Asbar தெரிவித்துள்ளார்.



