
கோலாலம்பூர், மே-2,
முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி, வரும் திங்கட்கிழமை வாக்குமூலம் அளிப்பதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யால் அழைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள பண்டான் நாடாளுமன்ற உறுப்பினரான அவர், திங்கட்கிழமை காலை 10 மணிக்கு புத்ராஜெயாவில் உள்ள MACC தலைமையகத்தில் முன்னிலையாகுமாறு தமக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கடந்தாண்டு மார்ச் மாதம், பிரிட்டனைச் சேர்ந்த Arm Holdings
என்ற செமிகண்டக்டர் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட 1.1 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அரசாங்க ஒப்பந்தம் குறித்த விசாரணை இதில் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த ஒப்பந்தத்தில் அமைச்சரவைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிகிறது.
தவறான தகவல்களை வழங்கியதாகவோ அல்லது அவசரமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சரவையைத் தூண்டியதாகவோ கூறி, தன் மீது ‘நம்பிக்கை மோசடி குற்றம்’ (CBT) சுமத்தப்பட வாய்ப்புள்ளதாக ரஃபிஸி குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ள அவர், தாம் எந்தவொரு கைமாறோ அல்லது லஞ்சமோ பெறவில்லை என்றும், தமது சட்டக் குழுவுடன் விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.



