
பூச்சோங், மே-3-SPM தேர்வில் நன்னெறிப் பாடத்திற்கான மதிப்பீட்டு முறையில் நிலவுவதாகக் கூறப்படும் குளறுபடிகளை உடனடியாக மறுஆய்வு செய்ய கல்வி அமைச்சர் ஃபாட்லிலீனா சிடேக் உத்தரவிட்டுள்ளார்.
சிறந்த முறையில் தேர்வெழுதிய பல மாணவர்களுக்கு இந்தப் பாடத்தில் எதிர்பாராத விதமாக குறைந்த மதிப்பெண்கள் வழங்கப்பட்டதால், அவர்களின் எதிர்கால உயர்கல்வி வாய்ப்புகள் பாதிக்கப்படுவதாகப் பெற்றோர்களும் மாணவர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தற்போதுள்ள மதிப்பீட்டு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், ஒரு மாணவர் ‘A+’ பெறுவதற்கு 95 மதிப்பெண்களுக்கும் மேல் எடுக்க வேண்டும் என்ற மிகக் கடினமான நிபந்தனை இருப்பதாகவும் ஸ்ரீ முருகன் மையத்தின் (SMC) இயக்குநர் சுரேன் கந்தா மற்றும் MUDA கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், பொது மக்களின் கவலைகளைத் தாம் உணர்வதாகவும், தேர்வு வாரியம் இந்த முறையை மேம்படுத்த வேண்டும் என்றும் ஃபாட்லீனா வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மதிப்பீட்டு முறையில் மாற்றங்களைக் கொண்டு வரவும் அவர் பணித்துள்ளார்.
இந்த நன்னெறிப் பாட விவகாரத்தை அமைச்சின் கவனத்துக்குக் கொண்டு வந்த சுரேனுக்கு ஃபாட்லீனா நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.
அமைச்சர் முன்னதாக, பூச்சோங் காசல்ஃபீல்ட் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற SMC கல்வி யுத்தம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.
இவ்வேளையில், இந்தியச் சமூக மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் இடங்களை 2,500 ஆக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சுரேன் முன்வைத்துள்ளார்.



