
கோத்தா கினாபாலு, மே-30-சபாவில் 12 ஆண்டுகளாக அடையாளம் காணப்படாமல் இருந்த ஓர் அரிய வகை தாவர மாதிரி, தற்போது உலக அளவில் முற்றிலும் புதியதொரு தாவர இனமாக அதிகாரப்பூர்வமாக உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
2014-ஆம் ஆண்டு தாவாவ் மலைப் பூங்காவில் (Tawau Hills Park) முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தாவரம், Ardisia condensiflora எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மலேசிய சபா பல்கலைக்கழகத்தின் (UMS) ஆராய்ச்சியாளர் Dr Avelinah Julius மற்றும் சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவின் Dr Timothy Utteridgeஆகியோர் இணைந்து இந்த அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அனைத்துலகத் தாவரவியல் இதழான Phytotaxa-வில் வெளியாகியுள்ளது.
தாழ்வான காடுகள் மற்றும் ஆற்றங்கரைகளில் மட்டுமே வளரும் இந்தத் தாவர இனம், உலகில் தாவாவில் மட்டுமே காணப்படுவதால், இது சபாவுக்கு மட்டுமே உரித்தான ஓர் அரிய வகை இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருப்பதால், இது தற்போது அழிய வாய்ப்புள்ள தாவரங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
சபா காடுகள் உலக அளவில் இன்னும் கண்டறியப்படாத பல இயற்கை இரகசியங்களைக் கொண்டுள்ள ஒரு ‘வாழும் ஆய்வுக் கூடம்’ என்பதற்கு இந்த கண்டுபிடிப்பே சான்று என UMS பல்கலைக்கழகத் துணைவேந்தர் Kasim Mansor பெருமிதம் தெரிவித்துள்ளார்.



